செய்திகள்
டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருக்கிறதா என்று மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

விளாங்குடியில் டெங்கு கொசு புழுக்கள் இருந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2019-10-23 10:03 GMT   |   Update On 2019-10-23 10:03 GMT
விளாங்குடியில் டெங்கு கொசு புழுக்கள் இருந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விளாங்குடி அபிராமி நகர், சமயநல்லூர் மெயின் ரோடு, விசாலாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணியாக வீடு வீடாக நீல நிற டிரம்கள், பாத்திரங்கள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரிலும், குளிர்சாதனப் பெட்டியிலும் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆணையாளர் விசாகன் இன்று ஆய்வு செய்தார்.

சமயநல்லூர் மெயின் ரோடு விளாங்குடி சாலையில் உள்ள தனியார் நிறுவனங்களில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்தபோது தனியார் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்த தேவையற்ற பழைய பொருட்களில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

மேலும் நிறுவனத்தில் ஆங்காங்கே உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார்.

அபிராமி நகர் பகுதியில் காலியிடங்களில் தேங்கியிருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டு தீவிர துப்புரவுப் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விளாங்குடி பகுதியில் சாலையோரங்களில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகளில் உள்ள டயர்களில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து டயர்களை அப்புறப்படுத்துமாறும், டயர்களில் மழைநீர் தேங்காதவாறு பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுரை கூறினார்.

அதனைத் தொடர்ந்து கரிசல்குளம் கோவில் பாப்பாகுடி சாலையில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரக் கூடத்தினையும், மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குன்னத்தூர் சத்திரம் வளாகம் கட்டுமான பணியினையும், பல்லடுக்கு வாகன காப்பகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆணையாளர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் மழைநீர் தேங்காதவாறு சுத்தமாக பாராமரிக்குமாறு கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் முருகேச பாண்டியன், நகர்நல அலுவலர் (பொ) வினோத்ராஜா, செயற் பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News