செய்திகள்
கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்

நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்

Published On 2019-10-22 08:11 GMT   |   Update On 2019-10-22 08:11 GMT
நான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மாவதி பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. மேலும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் பிரிதா ஆகிய பெயர்களிலும் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்கி ஆசிரமங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கணக்கில் வராத ரூ.65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.45 கோடி இந்திய பணமாகும். மீதமுள்ளவை அமெரிக்க டாலர்களாக உள்ளன.

மேலும் ரூ.28 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.5 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் ஹவாலா முறையில் பணபரிமாற்றம் நடந்து ரூ.100 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதற்கு உரிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை ஆராயப்பட்டு வருகின்றன. பினாமி பெயர்களில் நிலம் வாங்கி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 19 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.



ரெய்டு நடத்தப்பட்டதையடுத்து கல்கி விஜயகுமார் மற்றும் அவரது மனைவியை காணவில்லை. அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கல்கி விஜயகுமார் தனது ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை. நான் இங்கேதான் இருக்கிறேன்.

பக்தர்களுக்கு தொடர்ந்து ஆசி வழங்கி வருகிறேன். வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை. வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை.

இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

Tags:    

Similar News