செய்திகள்
மக்கள் மறியல்

திருமங்கலம் அருகே தடுப்பணையை அகற்றக்கோரி 6 கிராம மக்கள் மறியல்

Published On 2019-10-21 11:57 GMT   |   Update On 2019-10-21 11:57 GMT
திருமங்கலம் அருகே தடுப்பணையை அகற்றக்கோரி 6 கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரையூர்:

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சவுடார்பட்டி, வளையப்பட்டி மீனாட்சிபுரம், வால் நாயக்கன்பட்டி, சித்திரெட்டிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

சவுடார்பட்டி மற்றும் கரிசல்குளம் கண்மாய் மூலம் இந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த 2 கண்மாய்களுக்கும் சதுரகிரி-சாப்டூர் பகுதியிலிருந்து கமண்டல நதி மூலம் தண்ணீர் வரத்து ஏற்படும்.

இந்த நிலையில் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பூசலப்புரம், முத்துபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 இடங்களில் வரத்து கால்வாயை மறித்து 4 அடி உயரம் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சவுடார்பட்டி, கரிசல்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தடுப்பணைகளை அகற்றி 2 கண்மாய்களுக்கும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் பலமுறை கிராம மக்கள் முறையிட்டும் நடவ டிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று 6 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஆவல்சேரி, ஜம்பலபுரம், எம் கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஆகிய 4 பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்த சேடபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். கிராம மக்களின் மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News