செய்திகள்
கைது

சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பத்திர மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2019-10-21 11:42 GMT   |   Update On 2019-10-21 11:42 GMT
சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பத்திர மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை நரிமேடு அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒத்தக்கடையைச் சேர்ந்த பீர்பாத்திமாவுக்கு சொந்தமான 9 வீடுகளை விற்பதற்கான ‘பவர் ஏஜெண்டு’ ஆக இருந்தார்.

இந்த நிலையில் செல்வராஜ் இறந்து விட்டார். அப்போது அவரின் மகன் சரவணன் (39), தந்தை இறந்ததை மறைத்து விட்டு, அந்த பத்திரத்தை தன் பெயருக்கு மாற்றி ஒத்தக்கடை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.

அதன் பிறகு சரவணன் அந்த சொத்துக்களை தாய் ரேணுகா பெயருக்கு தான பத்திரமாக மாற்றி ஒத்தக்கடை சார்பதிவாளர் அலுவலகத்தில் மனைவி செல்வியின் சாட்சி கையெழுத்துடன் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலக நிர்வாகம் சமீபத்தில் ஆவணங்களை பரிசோதித்து பார்த்தபோது மேற்கண்ட பத்திர மோசடி பற்றிய விவரம் தெரியவந்தது.

இது தொடர்பாக ஒத்தக் கடை சார்பதிவாளர் பாலமுருகன் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து சொத்து பத்திர மோசடியில் ஈடுபட்டதாக சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தவிர ரேணுகா, செல்வி ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News