செய்திகள்
வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2019-10-21 01:53 GMT   |   Update On 2019-10-21 01:53 GMT
தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
நாங்குநேரி :

தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), தி.மு.க. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராஜ்நாராயணன் (நாம் தமிழர்) உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையேயும், விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தயில் ஜான்குமார்(காங்கிரஸ்), புவனேஸ்வரன்(என்.ஆர்.காங்), வெற்றிச்செல்வம்(மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்), பிரவீனா (நாம் தமிழர் கட்சி) உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த மூன்று தொகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மூன்று தொகுதிகளிலும் பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 24-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News