செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தபோது எடுத்தபடம்.

ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி

Published On 2019-10-19 02:33 GMT   |   Update On 2019-10-19 02:33 GMT
ப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதாவின் ஆன்மாதான் காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நாங்குநேரி :

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னீர்பள்ளம், கிரு‌‌ஷ்ணாபுரம், கே.டி.சி.நகரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், அவருடைய மகன் ஸ்டாலினும் போட்ட வழக்குதான் காரணம். இவர்கள் பொய் வழக்கு போட்டு, அவர் சிறை சென்றதால் தான் மனஉளைச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். ஆனால், இன்று மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

இன்று நாம் தான் தாயை இழந்த பிள்ளைகள் போல் தவித்து வருகிறோம். ஜெயலலிதா ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது. ஜெயலலிதா மறைவுக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம். ஏனென்றால் அவர் ஜெயலலிதா தண்டனை பெறுவதற்கு பொய்யான தகவலை கொடுத்தார். இன்று ஜெயலலிதா ஆன்மா அவரை சும்மா விட்டதா? ப.சிதம்பரம் சிறையில் இருக்கிறார்.

ஜெயலலிதா குறித்து கனிமொழி வசை பாடி வருகிறார். அவரும் திகார் சிறையில் அடைபட்டு கிடந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தால் அவரது ஆன்மா சும்மா விடாது. ஸ்டாலின் வி‌‌ஷமத்தனமான பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடம் தவறான பிரசாரத்தை பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

122 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாகவும், ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் ஸ்டாலின் கூறி வந்தார். ஆனால் அவரது கனவு ஒருபோதும் பலிக்கவில்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது தி.மு.க.வினர் மேஜை மீது ஏறி நின்று நடனமாடினார்கள். ரவுடித்தனம் செய்யும் கட்சியான தி.மு.க. என்பதை சட்டமன்றத்தில் நிரூபித்து விட்டனர்.

இந்த ரவுடிகளை ஆட்சியில் அமர்த்தினால் இந்த நாடு தாங்குமா? பெரும்பான்மையை நிரூபித்த பிறகு வெளியில் வந்த ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். இவை அனைத்தும் அவரது சுயநலம், பதவி வெறி ஆகும்.



அ.தி.மு.க.வை உடைக்க பார்த்தனர். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியவில்லை. அ.தி.மு.க.வில் ஒரு தொண்டனை கூட அவர்களால் வாங்க முடியாது.

நீட் தேர்வில் அ.தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று தவறான பிரசாரம் செய்து வருகிறார் ஸ்டாலின். 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தபோது அவர்கள் நீட் தேர்வை கொண்டு வந்தனர். அதை தடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்து உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

நீட் தேர்வை கொண்டு வந்தது நீங்கள். பழியை எங்கள் மீது சுமத்தாதீர்கள். நீட் தேர்வுக்கு ஆதரவாக ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி இருக்கிறார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் உங்களை ஏமாற்றி ஓட்டு கேட்கிறார்கள். மக்களை குழப்பி ஆட்சிக்கு எதிராக அரசியல் நாடகத்தை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

தி.மு.க.வினர் ஆட்சிக்கு வராவிட்டால் திண்ணைக்கு வருவார்கள். மக்களிடம் மனுக்கள் வாங்குவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் மக்களை மறந்துவிட்டு தங்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.

பழி வாங்கும் கட்சி தி.மு.க. மட்டுமே. அது கட்சியாக அல்ல, கார்ப்பரேட் கம்பெனியாக செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக ஸ்டாலின் இருக்கிறார். ஸ்டாலினின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News