செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த அனுமதி

Published On 2019-10-18 18:36 GMT   |   Update On 2019-10-18 18:36 GMT
வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரை:

டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அதிகாலை வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தீபாவளியை முன்னிட்டு வியாபாரிகள் பலர் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதாகவும், தீபாவளிக்கு முந்தைய 25, 26-ஆம் தேதிகள் வெள்ளி, சனிக்கிழமைகள் என்பதால் அவ்விரு நாட்களில் பொருட்கள், ஆடைகளை வாங்கிச் செல்வதற்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இரு நாட்களில் இரவு முழுவதும் வியாபாரம் செய்ய கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி, அதிகாலை 2 மணி வரை மட்டும் கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில்  பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற உத்தரவிட்ட அவர், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags:    

Similar News