செய்திகள்
டெங்கு காய்ச்சல்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு

Published On 2019-10-18 09:55 GMT   |   Update On 2019-10-18 09:55 GMT
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இதற்கென சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

இங்கு டெங்கு அறிகுறியுடன் வரும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வரை 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 6 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள். இவர்களுடன் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இவர்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்பதை மாவட்ட சுகாதார துறையினர் கண்காணித்து வருகிறார்கள். நோய் அறிகுறி தென்படுவோர் கண்காணிக்கப்பட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையே சுகாதாரத்துறை ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதித்தோரை கண்டறிந்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதற்காக கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News