செய்திகள்
தரைப்பாலம் இடிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

தவளக்குப்பம் அருகே தரைப்பாலம் இடிந்து விழுந்தது

Published On 2019-10-17 16:31 GMT   |   Update On 2019-10-17 16:31 GMT
தவளக்குப்பம் அருகே தொடர் மழையால் சேதமாகி இருந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது.

பாகூர்:

புதுவை தவளக்குப்பம் அருகே நோணாங்குப்பம்- இடையார்பாளையம் இடையே பழமையான தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை என்.ஆர். நகர் மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் புதிய பாலத்தில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களிலும் இந்த பழைய பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே இந்த பழமையான தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமானது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசு மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், பாலம் சீரமைக்கப்படவில்லை. நாளடைவில் தரைப்பாலம் மேலும் சேதம் அடைய தொடங்கியதால் அவ்வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்கள் மட்டும் அவ்வழியே சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையால் இன்று காலை தரைப்பாலம் இடிந்து விழுந்தது. வாகன ஓட்டிகள் யாரும் அவ்வழியே செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே பாலம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, இளநிலை பொறியாளர் மனோகரன் ஆகியோர் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இடிந்த பாலத்தை செப்பனிட முடியாது என்பதால் புதிய பாலம் கட்டும் வரை அவ்வழியே போக்குவரத்தை தடை செய்ய போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் தனசேகரன் ஆகியோர் பாலம் இடிந்து விழுந்த பகுதிகளின் இரு புறமும் பேரிக்கார்டு அமைத்து போக்குவரத்து தடை ஏற்படுத்தினர். மேலும் போக்குவரத்து தடைக்கான அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

Tags:    

Similar News