செய்திகள்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி நாளை தொடக்கம்- கலெக்டர் தகவல்

Published On 2019-10-16 11:47 GMT   |   Update On 2019-10-16 11:47 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி நாளை தொடங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில் ஆண்டுகளுக்கு 2 முறை மாடுகளுக்கு கால், வாய் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது 2வது கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான மருந்துகள் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 250 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளுக்கு கடந்த முறை 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முறையும் அனைத்து அதிகாரிகளுடன் இணைந்து 100 சதவீதம் மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 36 குளங்களில் தூர்வாரும் பணி நடந்தது. இதில் 28 குளங்களில் 100 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. 8 குளங்களில் 70 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று ஊரக வளர்ச்சித் துறை மூலம் 87 சிறுபாசன குளங்கள், 423 குளங்கள், குட்டைகள் தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் இந்த வாரத்துக்குள் முடிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 கிலோ மீட்டர் தூர தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி நடைபெற உள்ளது. அதன்படி நாளை (17-ந் தேதி) மற்றும் 18-ந் தேதிகளில் கனரக வாகனங்கள் மூலம் முட்செடிகள், புதர்கள் அகற்றப்படுகின்றன. 19, 20-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த பணி 45 இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கிறது. காலையில் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News