செய்திகள்
ஏற்காடு நல்லூரில் உள்ள அருவியில் தண்ணீர் கொட்டுவதையும், மலைப்பாதையில் உருவான நீர்வீழ்ச்சியையும் காணலாம்.

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- ஏற்காடு மலைப்பாதையில் புதிய நீர்வீழ்ச்சிகள்

Published On 2019-10-16 10:55 GMT   |   Update On 2019-10-16 10:55 GMT
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மேட்டூர், ஆனைமடுவு, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் கன மழை பெய்வது போல வந்தது. ஆனால் லேசான சாரல் மழையுடன் நின்று போனது. சேலம் புறநகர் மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காலை, மதியம், இரவு நேரங்களில் மூடு பனி ஏற்படுவதால் வாகனங்களில் செல்வோர் பகல் நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு செல்கிறார்கள்.

குளிர்ந்த காற்று, பனி, மழை காரணமாக ஏற்காடு ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் மழையால் மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ணத்தை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.

மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:- மேட்டூர் 35.6,ஆனைமடுவு 30, தம்மம்பட்டி26.2, ஆத்தூர் 16.4, கெங்கவல்லி 14.3, காடையாம்பட்டி 13.4, வீரகனூர் 12, கரியகோவில் 10, பெத்தநாயக்கன்பாளையம் 9, சேலம் 7.8, ஏற்காடு 7, ஒமலூர் 3, எடப்பாடி 1.6, வாழப்பாடி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 187.3 மி.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News