செய்திகள்
மழை

வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2019-10-16 10:28 GMT   |   Update On 2019-10-16 10:28 GMT
நடப்பு ஆண்டில் புதுவையில் சராசரியாக ஆயிரத்து 200 மி.மீ., தாண்டி மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைதான் புதுவையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக உள்ளது. மார்ச் மாதம் ஆரம்பித்த வெயிலின் தாக்கம், கோடைக்காலம் முடிந்து, மழைக்காலம் துவங்கிய பிறகும் குறையவில்லை. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன. மிகப் பெரிய ஏரியான ஊசுடு ஏரியின் உயரம் 3.5 மீட்டராகும். இதில் 60 செ.மீ., உயரத்துக்கே தண்ணீர் உள்ளது. இதேநிலையில்தான் புதுவையில் உள்ள 84 ஏரிகளும் உள்ளன. பெரும்பாலான குளங்களும் தண்ணீர் இல்லாமல் புற்கள் வளர்ந்து கிடக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பித்து, ஜூன் வரையிலான காலகட்டத்தில் 48 மி.மீ., அளவுக்கு கோடை மழை பெய்தது.

இதைதொடர்ந்து ஜூலையில் ஆரம்பித்து, செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை சீசனில் 558 மி.மீ., மழை பதிவானது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, புதுவையில் 606 மி.மீ., அளவுக்கு மழை பெய்தபோதும், கோடை வெயில் கடுமையானதால் நீர் நிலைகளில் தேங்கிய மழை நீர் ஆவியாகி வறண்டு கிடக்கின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த இரு நாட்களாக புதுவையில் மழை பெய்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு ஆண்டில், புதுவையில் சராசரியாக ஆயிரத்து 200 மி.மீ., தாண்டி மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

Tags:    

Similar News