செய்திகள்
மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியது- தமிழகத்தில் பரவலாக மழை

Published On 2019-10-16 08:09 GMT   |   Update On 2019-10-16 08:09 GMT
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை:

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்ததற்கு ஒரு நாள் முன்னதாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. 

தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் கனமழை பெய்யும்.

இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 சென்டி மீட்டர் மழையும் பாம்பனில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 17, 18 ஆகிய தேதிகளில் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News