செய்திகள்
டெங்கு காய்ச்சல்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு சிறப்பு வார்டில் குழந்தை உள்பட 7 பேர் அனுமதி

Published On 2019-10-16 06:24 GMT   |   Update On 2019-10-16 06:24 GMT
ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் இன்று குழந்தை உள்பட 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில்:

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

குமரி மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது.

இதையடுத்து தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு சிறப்பு வார்டு திறக்கப்பட்டது.

இதில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் இன்று குழந்தை உள்பட 7 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 4 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் உடல் நிலை தேறி வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் தற்போது தினமும் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் விட்டுவிட்டு பெய்யும் மழை காரணமாக பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலரும் குமரி மாவட்டத்தில் உள்ள பல தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது டெங்கு பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு இருப்போரை கண்டறிய சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு இருப்போர் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News