செய்திகள்
முக ஸ்டாலின்

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முக ஸ்டாலின்

Published On 2019-10-16 03:21 GMT   |   Update On 2019-10-16 04:21 GMT
சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
நெல்லை:

நாங்குநேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெறுகிறேன். இதைப்பற்றி விமர்சனம் செய்கின்றனர். நான் பெறும் மனுக்கள் தி.மு.க. ஆட்சி வந்தவுடனே பரிசீலிக்கப்பட்டு உடனே தீர்க்கப்படும். அதுவரை இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்படும். இதுபற்றி சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்து நிறைவேற்றி தருவோம்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேர் இருக்கின்றனர். அவர்கள் என்றாவது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றது உண்டா? பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டது உண்டா? இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த துப்பில்லை. அவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும்?



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு சென்றால் அதைப்பற்றி கேள்வி கேட்கமாட்டேன். முதல்-அமைச்சர் என்ற முறையில் சென்றதால் அதைப்பற்றி கேள்வி கேட்கிறேன். ஆனால் அவர் அதற்கு பதில் கூறாமல், என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார்.

நான் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜப்பான் சென்று உலக வங்கி நிதி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினேன். சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவந்தேன். இந்த ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை பதுக்குவதற்காக அவர் வெளிநாடுகளுக்கு சென்றாரா? என்று கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

நான் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறுகின்றனர். 8 ஆண்டுகளாக இங்கு அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. மத்தியிலும் உங்களுக்கு இணக்கமான ஆட்சிதான் உள்ளது. நான் எவ்வளவு பணம் பதுக்கி வைத்துள்ளேன் என்பதை ஏன் கண்டுபிடித்து வெளியே சொல்லவில்லை? நீங்கள் அதனை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார். நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் ஊரைவிட்டே ஓடவேண்டும்.

நெடுஞ்சாலை துறை டெண்டர் விடுவதில் முதல்-அமைச்சர் மீது உள்ள ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதியே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல்கள் உள்ளது.

இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.
Tags:    

Similar News