செய்திகள்
சத்யபிரத சாகு

சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Published On 2019-10-16 02:28 GMT   |   Update On 2019-10-16 04:59 GMT
சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்தார்.
சென்னை :

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தகவல்களை பார்வையிட்டு, திருத்தம் செய்வதற்கான காலஅவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்து உள்ளது. இதில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1 கோடியே 87 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு விவரங்களை சரி செய்து உள்ளனர். சென்னையில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் மூலமாகவும், 5.78 லட்சம் பேர் மொபைல் ஆப் மூலமாகவும் திருத்தம் செய்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 86 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலை பார்த்து விவரங்களை சரி செய்து உள்ளனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் அரியலூர் 69 சதவீதம், நீலகிரி 54 சதவீதம், கோவை 37.53 சதவீதம், திருச்சி 34.96 சதவீதம், நெல்லை 34 சதவீதம், கன்னியாகுமரி 23 சதவீதம், மதுரை 13.58 சதவீதம், சென்னை 8 சதவீதம் பேர் பார்த்து விவரங்களை சரி செய்துள்ளனர்.

பொதுவாக 8 முதல் 84 சதவீதம் பேர் விவரங்களை பார்த்து சரி செய்து உள்ளனர். சென்னையில் வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு சென்று உள்ளனர். அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் சென்னையில் வசிப்பவர்கள் பட்டியலை பார்வையிட்டு தவறு இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். இதில் சென்னையில் வசிப்பவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.48 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரூ.25 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் 22 ஆயிரத்து 847 லிட்டர் மதுவகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுதவிர ரூ.13 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் தங்க நகைகள், நாணயங்கள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் புடவை உள்ளிட்ட துணிவகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆக மொத்தம் ரூ.91 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.



விக்கிரவாண்டியில் சீமான் பேசியது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டரான, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராதாபுரம் தொகுதி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து எதுவும் கூற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இடைத் தேர்தல்களின் போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும் பரப்புதலுக்கும் சில வரையறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை பொருத்தவரையில் 21-ந்தேதியில் இருந்து 48 மணிநேரத்துக்கு முன்பாக அதாவது வரும் 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்து கணிப்பு வெளியிட கூடாது. அதேபோன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பாக 21-ந்தேதி ஓட்டுப்பதிவு முடியும் மாலை 6.30 மணி வரை எந்தவித கருத்து கணிப்பும் வெளியிட கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News