செய்திகள்
கோப்புப்படம்.

அய்யலூரில் போலி டாக்டர் போட்ட ஊசியால் இளம்பெண் உடல்நிலை பாதிப்பு

Published On 2019-10-15 12:29 GMT   |   Update On 2019-10-15 12:29 GMT
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் போலி டாக்டர் செலுத்திய ஊசியால் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரை, கொம்பேரிபட்டி, பூசாரிபட்டி, சுக்காம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் போலி டாக்டர்கள் நடமாடி வருகின்றனர். சிலர் மருந்து கடை வைத்து அதிலேயே ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காலை நேரங்களில் மலை கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதால் பலர் அவர்களை நம்பி மருந்து மாத்திரை பெற்று வருகின்றனர்.

தனியார் கிளினிக்கில் வாங்கப்படும் தொகையை விட குறைவான பணமே வாங்குவதாலும் தங்கள் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிப்பதாலும் பலர் இவர்களை போலி டாக்டர்கள் என நினைக்காமல் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்து நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அய்யலூரை அடுத்துள்ள செங்கனத்துப்பட்டியை சேர்ந்த 22 வயது பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு போலி டாக்டரிடம் காய்ச்சலுக்கு இன்று சிகிச்சை பெற்றார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அய்யலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். டாக்டர் பமிலன் அவரை பரிசோதனை செய்தபோது ஹெவிடோஸ் மருந்து அவருக்கு வழங்கப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இப்பகுதியில் பலர் எம்.பி.பி.எஸ். என கூறிக்கொண்டு சிகிச்சை அளிப்பதாகவும் பொதுமக்கள் அவர்களை நம்பி சிகிச்சை பெறுவதால் இதுபோன்ற பக்க விளைவு நோய்களுக்கு ஆளாகி வருவதாவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News