செய்திகள்
கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2019-10-15 10:09 GMT   |   Update On 2019-10-15 10:09 GMT
கொடைக்கானலில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் சமீப காலமாக கஞ்சா மற்றும் போதைகாளான் விற்பனை அதிகரித்து வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு நடவடிக்கைகள் மூலம் போதை பொருள் விற்பனையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி பாக்கியபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(42), அவரது மகன் கோகுல்(25), கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கஞ்சா விற்பனைக்கு தேனி அண்ணாநகரை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மனைவி கஸ்தூரி(24) மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடம் இருந்து மொத்தம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதான கஸ்தூரியின் கணவர் ஆசைத்தம்பியும் கஞ்சா வழக்கில் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் நடவடிக்கைக்கு கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News