செய்திகள்
உயிரிழப்பு

காலாப்பட்டு அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை பலி

Published On 2019-10-15 09:25 GMT   |   Update On 2019-10-15 09:25 GMT
காலாப்பட்டு அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஜிப்மர் நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

சேதராப்பட்டு:

காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான ராவுத்தன் குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேலு. விவசாய கூலி தொழிலாளி.

இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் சாருமதி என்ற பெண் குழந்தை இருந்தது. சாருமதி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தாள்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சாருமதிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கவுரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தார். மறுநாளும் குழந்தைக்கு காய்ச்சல் வந்ததால் குழந்தையை ஜிப்மருக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு பின் குழந்தையை வீட்டுக்கு கவுரி அழைத்து வந்தார்.

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பதறியடித்து குழந்தையை பெற்றோர் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

அப்போது பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் தங்களது குழந்தையின் சாவுக்கு டாக்டர்களின் அலட்சிய போக்குதான் என குற்றம் சாட்டினர்.

குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம காய்ச்சலால் குழந்தை இறந்ததா? என்பது குறித்து ஜிப்மர் நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

Tags:    

Similar News