செய்திகள்
மதுரை ஐகோர்ட்

உதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2019-10-15 08:32 GMT   |   Update On 2019-10-15 08:32 GMT
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை:

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா (வயது20) என்பவரையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆள் மாறாட்டம் தொடர்பாக தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கைதாவதற்கு முன்பு உதித்சூர்யா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 3-ந்தேதி நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உதித்சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


அதன்படி ஜாமீன் கோரிய வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைதானவர்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் உதித் சூர்யா தந்தையின் பங்கு மிக முக்கியமானது. இந்த குற்றத்தை மன்னிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள உதித் சூர்யாவின் தந்தையை, போலீசார் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உதித் சூர்யா தந்தையின் ஜாமீன் மனு தேனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டுக்கு மாற்றினால் உதித் சூர்யாவின் ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கை 17-ந் தேதிக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News