செய்திகள்
சீமான்

பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது- சீமான்

Published On 2019-10-15 02:02 GMT   |   Update On 2019-10-15 02:02 GMT
பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை :

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கை 28 ஆண்டுகளாக பேசிக்கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்து கொண்டு இருக்கிறார்கள். இது தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம்.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள். தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. ஆட்சியில் இருந்தபோது காவிரி நதி நீரை பெற்றுத்தர முடிந்ததா?

ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறித்தான் இலங்கையில் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள். இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசுதான். அதற்கு தி.மு.க. உடன் நின்றதை யாராவது மறுக்க முடியுமா?. ஒரு மரணத்துக்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர்.



பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாகத்தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அணு உலையை எதிர்த்து போராடினால் தேச துரோகி என 2 கட்சிகளும் சொல்கிறது. நீட் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பா.ஜனதா கட்சி.

நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்ததுதான் காரணம். எல்லா திட்டங்களையும் இந்த 2 கட்சிகள்தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜனதா, காவி கட்டிய காங்கிரஸ். இந்த 2 கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சீன அதிபரை தமிழகத்தில் சந்தித்ததால் பிரதமர் மோடி வேட்டி கட்டி இருப்பார். எனினும் தமிழனின் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News