செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க. எப்போதும் ஆட்சிக்கு வராது- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published On 2019-10-14 15:06 GMT   |   Update On 2019-10-14 15:49 GMT
2021-ல் மட்டுமல்ல, இனி எப்போதும் தி.மு.க. ஆட்சிக்கு வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோதைசேரியில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் வெற்றிபெறுவது உறுதி. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சென்னையிலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது. உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகின்றனர். 

அ.தி.மு.க.வை பொருத்த வரை உழைக்கும் வர்க்கத்தினருக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும், கட்சி கொடி கட்டும் கந்தனும் கொடி கட்டிய காரில் வரலாம் என்று அங்கீகாரம் கொடுத்து வருகிறோம். காங்கிரசில் கட்சிக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த குமரி அனந்தனுக்கு கூட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது அன்பு மகள் தமிழிசைக்கு பாரதிய ஜனதா நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளது. 

வைகோ மாற்றி மாற்றி பேசக்கூடியவர். தி.மு.க. பற்றி அவர் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்தால் கருணாநிதி குடும்பப் பெண்கள் வெள்ளை நிற சேலை அணிய வேண்டி வரும் என்று கூறியவர் தான் வைகோ. அதனை இல்லை என ஸ்டாலின், வைகோ மறுப்பார்களா? 

கனிமொழி மீது 2 ஜி ஊழல் புகார் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அவர்கள் "திக்திக்'' என்று உள்ளனர். நாங்கள் யாரும் அவ்வாறு இல்லை. தமிழன் என்றால் தலைநிமிரும் பிரதமர் கூட சீன அதிபர் சந்திப்பின்போது வேஷ்டி சட்டை அணிந்து தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ராசா, கனிமொழி போன்றவர்களால் தமிழனுக்கு தலைகுனிவு தான் ஏற்பட்டது.

முதல்வர் வெளிநாடு சென்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது குறித்து நாங்கள் புள்ளி விவரம் தெரிவிக்க எந்த நேரமும் தயாராகவே உள்ளோம். லிஸ்ட் கொடுத்தால் பாராட்டு விழா நடத்துவாரா ஸ்டாலின்? 

உள்ளாட்சி தேர்தலை கோர்டில் தடை வாங்கி நிறுத்தியவர் ஸ்டாலின் தான். 2021-ல் மட்டுமல்ல, இனி எப்போதும் தி.மு.க. ஆட்சிக்கு வராது. கடல் நீர் வற்றுவது எப்போது, கருவாடு திண்பது எப்போது? என்பது போலத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று கூறுவது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News