செய்திகள்
கொள்ளை

வத்தலக்குண்டுவில் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்கள் கொள்ளை

Published On 2019-10-14 13:25 GMT   |   Update On 2019-10-14 13:25 GMT
வத்தலக்குண்டுவில் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் வெற்றிலை நகர் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்து வருகின்றனர். நேற்று மாலை வழக்கம்போல் அலுவலகம் பணி முடிந்ததும் பூட்டிச் சென்றனர்.

இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான டெலிவரி பொருட்கள், கணினி உதிரி பாகங்கள் திருடப்பட்டிருந்தது. லாக்கரில் இருந்த பணம் ரூ.84 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து மேலாளர் ராமநாதன் மற்றும் சூப்பர் வைசர் நவீன்குமார், பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. பணம் மற்றும் பொருட்கள் இல்லாததால் தப்பின. வத்தலக்குண்டு பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் பொருட்களை திருடிச் சென்றன. மேலும் வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின. தற்போது கொள்ளை நடந்த தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வில்லை. இதனால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News