செய்திகள்
கைது

தேமுதிக கூட்டத்தில் ரகளை- திமுக பிரமுகர் கைது

Published On 2019-10-14 09:59 GMT   |   Update On 2019-10-14 09:59 GMT
சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க. கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நேற்று இரவு கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் நடந்தது.

வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் போரூர் தினகர், பகுதி செயலாளர் லட்சுமணன் முன்னிலையில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாஸ் பேசினார். கருணாநிதி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் “எங்கள் தலைவரை பற்றி எல்லாம் நீ பேசக் கூடாது” என கூறி ரகளையில் ஈடுபட்டார். உடனடியாக அங்கிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது.

உடனடியாக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் கலாட்டா செய்தவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆசைத்தம்பி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தே.மு.தி.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இரு கட்சியினரும் கே.கே. நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News