செய்திகள்
மழை

கொடைக்கானலில் கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-10-14 09:55 GMT   |   Update On 2019-10-14 09:55 GMT
கொடைக்கானலில் பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் புதிய அருவிகள் உருவாகி உள்ளன. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டகானல், கரடி சோலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் தற்போது நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரத்தினம் சோலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி நகர் பகுதிகளில் சீரான குடிநீர் வினியோயகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றும் மாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இரவு ஒரு மணி நேரம் கன மழையை தொடர்ந்து சாரல் பெய்தது.

இதனால் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு வந்தவர்கள் ஊர் திரும்பும்போது சிரமத்திற்குள்ளானார்கள். எதிரே நிற்பவர்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கரடிச் சோலை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதிக அளவில் தண்ணீர் வருவதால் அதில் பாறைகளும் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

புதிதாக செல்லும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியின் தன்மை தெரியாமல் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி கரடி சோலை நீர்வீழ்ச்சிக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags:    

Similar News