செய்திகள்
சத்யபிரத சாகு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2019-10-14 03:14 GMT   |   Update On 2019-10-14 03:14 GMT
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தி அடைவோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பிழைகள் இல்லாமல் அதனை தயாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி வாக்காளர்கள் தாங்களாகவே திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் 5 வகையான வழிமுறைகள் மூலமாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை பெற 1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ‘என்.எஸ்.வி.பி.’ என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவைப்பிரிவுகள் மூலமும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ளும் வசதி உள்ளது.

பிழைகள் இருந்தால், தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும். அதன்படி, பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரே‌‌ஷன் கார்டு, நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் பிறப்பு சான்றுகள், தொலைபேசி ரசீது, கியாஸ் இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் (விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவர்களது பெற்றோர் பெயர் இருக்க வேண்டும்), விண்ணப்பதாரரின் பெயர், முகவரியிட்ட தபால் உறை ஆகியவற்றின் நகல்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்.



இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதியில் இருந்து அக்டோபர் 15-ந் தேதி (நாளை) வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் வரும் நவம்பர் 18-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News