செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலின் போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது - முதலமைச்சர் விமர்சனம்

Published On 2019-10-13 12:57 GMT   |   Update On 2019-10-13 12:57 GMT
இடைத்தேர்தல் வரும் போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது விமர்சனம் செய்துள்ளார்.
நாங்குநேரி:

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் முதலமைச்சர்  பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல், பதவிக்காக வசந்தகுமார் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகியுள்ளார். வசந்தகுமாரின் பேராசையால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் நாராயணனை எளிதாக அணுக முடியும். காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதால் அணுக முடியாது.

யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நன்மை தரும் வேட்பாளர் வேண்டுமா? வெளியூர் வேட்பாளர் வேண்டுமா?  இடைத்தேர்தல் வரும்போதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.

நதிநீர் இணைப்புத் திட்டம் 2020-க்குள் நிறைவேற்றப்படும். ரூ. 200 கோடி செலவில் பச்சையாறு கால்வாய் அகலப்படுத்தப்படும். மக்கள் பிரச்சனைகளை கேட்டு ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? மக்களிடம் மனு வாங்கி யாரிடம் கொடுக்கப் போகிறார்?.

ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். தொகுதியை மறந்தவருக்கு அதிமுக வெற்றி மூலம் பாடம் புகட்ட வேண்டும். நல்லது செய்வதற்காக அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News