செய்திகள்
கோப்பு படம்

பொள்ளாச்சியில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க.வினர் 65 பேர் கைது

Published On 2019-10-12 14:05 GMT   |   Update On 2019-10-12 14:05 GMT
பொள்ளாச்சியில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 65 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் பார் ஏலம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் பொள்ளாச்சி பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்படுவதை தடுக்கவேண்டி கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசாரை கண்டித்து நேற்று தி.மு.க.வினர் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தி.மு.க.வினர் அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பேசினார். அப்போது பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் சாக்கடை, சாலைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிர்ணயிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் பொள்ளாச்சியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை தடுக்கக் கோரி தி.மு.க.வினர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும், போலீசார் தி.மு.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜ் உள்பட 65 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News