செய்திகள்
கைதான வக்கீல் மலர்க்கொடி

அண்ணாசாலையில் வெடிகுண்டுகள் வீச்சு: ரவுடியின் மனைவி-மகன் கைது

Published On 2019-10-11 06:57 GMT   |   Update On 2019-10-11 08:24 GMT
அண்ணாசாலையில் பட்டப்பகலில் வெடிகுண்டுகளை வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் ரவுடியின் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தோட்டம் சேகர். ரவுடியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவரது மனைவி மலர்க்கொடி வக்கீலுக்கு படித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது மகன் அழகர் ராஜாவுடன், நேற்று காலையில் எழும்பூர் கோர்ட்டுக்கு சென்றார். பிற்பகலில் மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் மேலும் 4 பேரும் ஆட்டோவில் பயணித்தனர்.

அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் சென்றபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென மலர்க்கொடியையும், அவரது மகன் அழகர் ராஜாவையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் நிலைகுலைந்தனர். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் பரபரப்பான அண்ணாசாலையில் நடந்த இந்த தாக்குதலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாக்குதலில் இருந்து தப்புவதற்கு ஆட்டோவில் இருந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அது நடுரோட்டில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. சாலையில் சென்றவர்கள் என்ன நடக்கிறது? என்று தெரியாமல் பீதி அடைந்தனர். வெடிகுண்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து பெண் வக்கீல், மலர்க்கொடியையும், அவரது மகன் அழகர் ராஜாவையும் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

அதே நேரத்தில் வெடிகுண்டு வீச்சில் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு வெடிச்சத்தத்தால் செவித்திறன் பாதிக்கப்பட்டது. அவரது ஆட்டோவில் சவாரி சென்ற ஒரு பெண்ணும், ஆணும் லேசான காயத்துடன் தப்பினர்.

ரவுடிகள் தாக்கியதில் பெண் வக்கீலின் முதுகில் வெட்டுக்காயங்கள் விழுந்தன. அவரது மகன் அழகர் ராஜாவுக்கும், கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மலர்க்கொடி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மலர்க்கொடியையும், அவரது மகனையும் கொலை செய்ய முயன்றது தொடர்பாக தனி வழக்கு போடப்பட்டது.

வெடிகுண்டு வீச்சு தொடர்பாக மலர்க்கொடி, அவரது மகன் அழகர் ராஜா மற்றும் மணிகண்டன், விஜயகுமார், கவுதமன் ஆகிய 5 பேர் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வெடிகுண்டு சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மலர்க்கொடி, அவரது மகன் அழகர் ராஜா, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கவுதமன், சங்கரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதானவர்களில் மணிகண்டன் திண்டிவனத்தை சேர்ந்தவர். விஜயகுமார் சூளைமேட்டில் வசித்து வருகிறார். பெண் வக்கீல் மலர்க்கொடியின் வீடு திருவல்லிக்கேணி சுப்பிரமணிய கார்டன் தெருவில் உள்ளது. மகனுடன், மோட்டார் சைக்கிளில் சென்றபோதுதான் எதிரிகள் இருவரையும் சுற்றி வளைத்து வெட்டினர். இதில் இருந்து தப்புவதற்காகவே மலர்க்கொடியுடன் வந்தவர்கள் வெடிகுண்டுகளை வீசி எதிர்தாக்குதலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மலர்க்கொடியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் தப்பி ஓடிய அரவிந்தன், அப்பு ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சீன அதிபர் வருவதையொட்டி சென்னையில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே லாட்ஜ் மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி பாதுகாப்பு வளையத்தில் சென்னை மாநகரம் இருந்த பரபரப்பான நேரத்திலேயே ரவுடிகள் வெடிகுண்டுகளை ஆட்டோவில் கடத்திச் சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகலில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்தபோது அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகள் அனைவருமே சீன அதிபரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெடிகுண்டு வீச்சு மற்றும் ரவுடிகள் மோதலை கேள்விப்பட்டதும் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னரே அவசரம் அவசரமாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, இத்தனை பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த போதிலும் ரவுடிகள் மோதலில் ஈடுபட்டு வெடிகுண்டுகளை வீசியதற்கு பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடே காரணம் என்று குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News