செய்திகள்
வைகோ

மாமல்லபுரம் சிற்பங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் - வைகோ அறிக்கை

Published On 2019-10-08 09:49 GMT   |   Update On 2019-10-08 09:49 GMT
மாமல்லபுரம் சிற்பங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு ஆகும். இதன் மூலம் இரு நாட்டிற்கும் சகோதரத்துவம் மலர்ந்து, ஆசியக்கண்டத்தின் அமைதிக்கு வித்திடுவார்கள் என நம்புகிறேன். இந்த நிலையில், மாமல்லபுரத்தின் தேவைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

பல்லவர்களின் மூன்று விதமான கட்டிட சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ள, வெட்டுதளி அர்ச்சுனன் தவக்கோலம்,  கட்டுதளி கடற்கரை அலை வாயில் கோயில்,  குடைதளி குடை வரைக் கோயில்கள், ஐந்து வகை நிலத்தின் சான்றாக கட்டிடக் கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஐந்து ரதம் மற்றும் பல்லவர்கள், எகிப்து, சீனம், ரோம் நாட்டு தொடர்புகளைக் காட்டும் சிற்பங்களை, புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது, புதிய தபால் தலைகள் வெளியிடுவது, இந்திய அரசுக்குச் சொந்தமான வானூர்திகளில் விளம்பரப்படுத்துவது, இந்திய அரசின் சார்பில் வீரத்திற்கு சான்றாக வழங்கப்படும் விருதுகளில் மாமல்லன் விருதுகளை அறிமுகப்படுத்துவது, உலக அளவில் மாமல்லபுரத்தை விளம்பரப்படுத்த உதவும். 
  
தஞ்சை மற்றும் மதுரையில் சோழன், பாண்டிய மன்னர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு தோரண வாயில்கள் போன்று, மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்மவர்ம பல்லவன், ராஜசிம்மவர்ம பல்லவன், தளபதி பரஞ்ஜோதி பெயர்களில் காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும்.

விடுமுறை பண்டிகைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்; தேவைப்படும் இடங்களில் இருவழிச் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுலா படகுப் பயணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

108 வைணவத் திருத்தலங்களுள் 63-வது திருத்தலமான அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோவில் முகப்பில், பாதியில் நிறுத்தப்பட்ட ராஜா கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கின்ற பல்வேறு வாகன சுங்கவரி, பார்வையாளர் கட்டணம் இவற்றால் விழிபிதுங்கும் நிலையை மாற்றிட வேண்டும்.

திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வழித்தடங்களிலும், கிழக்குக் கடற்கரைச் சாலையிலும்  வாகன நுழைவுக் கட்டணம், அடுத்த அரைகிலோ மீட்டரில் மாமல்லபுரம் பேரூராட்சியின் சார்பில் வாகன நுழைவுக் கட்டணம், மீண்டும் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வாகன நிறுத்தக் கட்டணம், அடுத்து மத்தியத் தொல்லியல் துறையின் சார்பில் பல்லவர் காலச் சிற்பங்களைப் பார்வையிட பார்வையாளர் கட்டணம் என்று மாமல்லபுரத்தைச் சுற்றிலும் பல இடங்களில் பகல் கொள்ளை அடிக்கப்படுகின்றது. மத்திய மாநில அரசுகள், இதை மாற்றி அமைக்க வேண்டும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள பார்வையாளர் கட்டணத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். மாமல்லபுரத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து இடங்களுக்கும், மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மதில் சுவர் எழுப்பி வேலி அமைத்துக்கொண்டு விட்டனர். 

எனவே, மாமல்லபுரம் 13 ஆவது வார்டு அண்ணாநகர் 160/2 கிராம நத்தம் பகுதியில், அனைத்து சாதிப்பிரிவு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சுமார் 400 குடும்பங்களுக்கு, பட்டா வழங்குவதில் உள்ள தடைகளை  விலக்கி, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். 

புகழ் வாய்ந்த மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழ, சுற்றுலா பயணிகளின் தேவைகளை அறிந்து, உள்ளூர் மக்களின் கருத்துக்கேட்டு, அயல்நாட்டுப் பயணிகளை மென்மேலும் ஈர்க்கின்ற வகையில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News