செய்திகள்
மழை

சேலம், சங்ககிரியில் நள்ளிரவில் கனமழை

Published On 2019-10-08 03:24 GMT   |   Update On 2019-10-08 03:24 GMT
சேலம், சங்ககிரியில் நள்ளிரவில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக சேலம் மாநகரில் நள்ளிரவில் தொடங்கிய மழை 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது. இதனால் கோரி மேடு, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஜங்சன், 5 ரோடு, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல சேலம் புறநகர் பகுதியான சங்ககிரி, வாழப்பாடி பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் தொடர்மழையால் மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

சங்ககிரி - 53, சேலம் - 39, வாழப்பாடி - 24, மேட்டூர் - 3.2, எடப்பாடி - 2.4, ஆனைமடுவு - 2 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் 123.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News