செய்திகள்
அன்புமணி

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது- மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

Published On 2019-10-07 11:22 GMT   |   Update On 2019-10-07 11:28 GMT
மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

பா. ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு விஷமத்தனமானது, கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தின் இந்த கருத்து இரு மாநில உறவுகளுக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும். கர்நாடகத்தின் வாதத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க புதிய அணைகட்ட வேண்டியது அவசியம் என்று கர்நாடகம் கூறியிருப்பது மிகவும் அபத்தமானது ஆகும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது. இதுதொடர்பான கர்நாடக அரசின் கடிதத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News