செய்திகள்
ஏரிக்கு பாய்ந்த அரசு விரைவு சொகுசு பஸ்சை படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே ஏரிக்குள் பாய்ந்த அரசு சொகுசு பஸ்

Published On 2019-10-04 12:27 GMT   |   Update On 2019-10-04 12:27 GMT
விழுப்புரம் அருகே அரசு சொகுசு பஸ் சாலை ஓரம் நின்ற மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்து நின்றது. கிரேன் உதவியுடன் ஏரிக்குள் பாய்ந்த பஸ்சை மீட்டனர்.
திருவெண்ணைநல்லூர்:

திருச்சியில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் சென்னைக்கு நோக்கி சென்றது. பஸ்சை காஞ்சி மாவட்டம் போரூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் ஓட்டினார். இந்த பஸ் விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூர்- மடப்பட்டு தேசிய நெஞ்சாலை பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.

சிறிது தூரம் சென்ற பஸ் சாலை ஓரம் நின்ற மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்து நின்றது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ், தர்மபுரி அருகே ஆவூரை சேர்ந்த பயணி பெருமாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய 2 பேரும் அபயக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் விழுப்புரம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய பஸ்சில் 6-க்கும் மேற்பட்ட பயணிகள்தான் இருந்தனர். அதோடு ஏரியிலும் குறைந்த அளவு தண்ணீர் இருந்தது. அதிகம் தண்ணீர் இருந்திருந்தால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் கிரேன் உதவியுடன் ஏரிக்குள் பாய்ந்த பஸ்சை மீட்டனர்.
Tags:    

Similar News