செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

Published On 2019-10-04 03:03 GMT   |   Update On 2019-10-04 03:03 GMT
இந்தியாவின் பெரிய மாநிலங்களில், பள்ளிக்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை:

இந்தியாவில் உள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று வகைப்படுத்தி, அங்குள்ள கல்வித் தரம் பற்றிய குறியீட்டு அட்டவணையை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டு வருகிறது.

இதற்காக மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கல்வித்தரத்தை நிர்ணயம் செய்வதற்கு 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த செயல் திறனை குறியீட்டு புள்ளிகளாக கணக்கிட்டு நிதி ஆயோக் தர வரிசை செய்கிறது.

அந்த வகையில் 2015-16-ம் ஆண்டிலும், 2016-17-ம் ஆண்டிலும் முறையே 77.6 மற்றும் 82.2 சதவீத புள்ளிகளைப் பெற்று கேரளா மாநிலம் முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக இந்த இரண்டு ஆண்டுகளிலும் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

2015-16-ம் ஆண்டில் 63.2 சதவீதமும், 2016-17-ம் ஆண்டில் 73.4 சதவீதம் புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கேரளாவில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்ற அளவில்தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 1.32 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-16-ம் ஆண்டில் மகாராஷ்டிரமும், 2016-17-ம் ஆண்டில் அரியானாவும் மூன்றாமிடத்தை பெற்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

வளர்ந்து வரும் மாநிலங்களில் கல்வித் துறையில் முதல் மாநிலமாக கேரளாவும், இரண்டாவதாக தமிழகமும் உள்ளன. இந்த ஆண்டும் இதுபோன்ற புள்ளிவிவரங்களை கணக்கிட்டால் தமிழகம்தான் முதலிடம் பிடிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த அளவுக்கு பள்ளிக்கல்விக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். பாடத்திட்டங்களிலும் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை. மேலும், பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தித்தருதல், பள்ளி செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில் பாடவாரியாக ஆசிரியர் நியமனம், தலைமை ஆசிரியருக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தல் ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்குதல், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் கல்வி மேலாண்மை தகவல் தளத்தில் (எமிஸ்) அடையாளக் குறியீடு ஏற்படுத்துதல் ஆகியவற்றில் தமிழகம் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை தூய்மையாக பராமரித்ததற்காக ஸ்வாச் வித்யாலயா புரஸ்கார் விருதை தமிழகம் பெற்றுள்ளது. டிஜிட்டல் முறை கல்வி கற்பித்த வகையில் ‘தீக்‌ஷா ஆப்’ செயலியை அதிக அளவு பயன்படுத்தியதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.



எனவேதான் 2018-19-ம் ஆண்டு, 2019-20-ம் ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் தரக்குறி யீட்டு அட்ட வணையை வெளியிட்டால் அதில் தமிழகம்தான் முதலிடம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் ஊக்கம் அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்தின் பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News