திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டு தருவார்கள் என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
திருச்சி:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று மாலை லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கடைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடையின் முதல் தளத்தில் இருந்த 700 முதல் 800 வகையான தங்கம், வைரம், பிளாட்டினம் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு மொத்தம் 13 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாங்கள் கூறுவது தான் உண்மையான மதிப்பு. இது தான் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கடை ஊழியர்கள் மீது சந்தேகம் இல்லை. கொள்ளையர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்களது கைகள் கூட வெளியில் தெரியவில்லை.
கடையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் நல்ல முறையில் வேலை செய்கின்றன. அதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளன. சுவர் பலவீனமாக இருந்தது என்று கூற முடியாது. தரை தளத்தில் இருந்த நகைகள் மட்டுமே திருடு போயுள்ளது. முதல் தளத்தில் இருந்த நகைகள் எதுவும் திருடு போகவில்லை. போலீசார் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடித்து களவு போன நகைகளை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.