செய்திகள்
அப்பாபு-இன்பதுரை

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை- இன்பதுரையின் மனு நிராகரிப்பு

Published On 2019-10-03 10:02 GMT   |   Update On 2019-10-03 10:02 GMT
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை:

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 19, 20 மற்றும் 21வது சுற்று வாக்குகளையும் எண்ண உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி எம்எல்ஏ இன்பதுரை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.  மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை எனக் கூறிய நீதிமன்றம், இன்பதுரையின் மனுவை நிராகரித்தது.

மறு வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 
Tags:    

Similar News