செய்திகள்
கைது

கோவையில் ஓடும் பஸ்சில் 5 பவுன் நகை திருடிய பெண் கைது

Published On 2019-10-01 10:01 GMT   |   Update On 2019-10-01 10:01 GMT
கோவையில் ஓடும் பஸ்சில் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோட்டைபுதூரை சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 42).

சம்பவத்தன்று கோவை வந்த இவர் சாய்பாபா காலனியில் இருந்து டவுன்ஹாலுக்கு வருவதற்காக பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் பூமார்க்கெட் அருகே வந்த போது பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி புவனேஸ்வரி மணிபர்சில் வைத்து இருந்த 3½ பவுன் தங்க செயினை திருடி தப்பி செல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி சத்தம் போட்டார்.

உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மதுரை வண்டியூரை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி கவிதா (40) என்பது தெரிய வந்தது. மேலும் கவிதா ஏற்கனவே சிவானந்தா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரத்துக்கு பஸ்சில் வந்த சேலம் ஆத்தூரை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் தாமரை செல்வி (27) என்பவரிடம் 1½ பவுன் செயினை பறித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்களிடம் கவிதா திருடிய 5 பவுன் செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News