செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-10-01 01:51 GMT   |   Update On 2019-10-01 01:51 GMT
எல்லோரும் ஒரே கூட்டணியில்தான் உள்ளனர். பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை :

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். புதுச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து உள்ளதால் மக்களின் ஏகோபித்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். தமிழகத்தில் என்றும் அ.தி.மு.க. ஆட்சிதான் இருக்கும் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.

பிரதமர் மோடி, தமிழகத்தின் மீதும், தமிழ் மொழி மீதும் அன்பு கொண்டு உள்ளதை அறிய முடியும். ஐ.நா.வில் தமிழை ஒலிக்கின்ற வகையில் பிரதமரின் பேச்சு இருந்தது. இதன் மூலம் அவர் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறார் என்பதை காணமுடியும்.



மாநில நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட்டு பல திட்டங்களை தமிழக அரசு பெற்று வருகிறது. இதுபோன்ற நல்ல சூழ்நிலையை திரித்து அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்படுகிறது. அதை வைத்து பிரதமரையோ, மந்திரியையோ எடை போட முடியாது. உண்மையான மார்க் போடுவது மக்கள்தான்.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜனதா ஆதரவு குறித்து வெளியிடவில்லை என்பது பெரிய விசயம் அல்ல. எல்லோரும் ஒரே கூட்டணியில்தான் உள்ளனர். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

கட்சி தலைமை அறிவித்ததுபோல் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும். வேட்பு மனு தாக்கல் முடிந்து உள்ளது. அடுத்தகட்ட வேலைகள் குறித்து தலைமை கழகம் அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News