செய்திகள்
மேகநாதனை கைது செய்த போலீசார்

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரம் - அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மைத்துனர் கைது

Published On 2019-09-29 03:05 GMT   |   Update On 2019-09-29 03:05 GMT
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 12-ம் தேதி பணி முடிந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் நடுவில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25). என்பவரை கைது செய்தனர்.

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

சம்பந்தப்பட்டவர் கைதானாலும் ஜாமீனில் வெளியே வரக்கூடிய செக்‌ஷனில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது பொது மக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது. இதனால் கோர்ட்டுக்கு பயந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில் ஜெயகோபால் தலைமறைவாகிவிட்டார்.

இதற்கிடையே, சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். அவரை அக்டோபர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பதுங்கி இருந்த இரண்டாம் குற்றவாளியான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை போக்குவரத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News