செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

கிருஷ்ணா தண்ணீர் இன்று தமிழக எல்லைக்கு வந்தது

Published On 2019-09-28 08:41 GMT   |   Update On 2019-09-28 08:41 GMT
கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்திலிருந்து ரெயில்கள் மூலம் தண்ணீர் வரவழைத்து சப்ளை செய்யப்பட்டது. மேலும் கல்குவாரி தண்ணீர் மற்றும் விவசாய கிணறுகளிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் 8 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி 8 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிட கோரி தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கடந்த மாதம் சந்தித்து முறையிட்டனர்.

கண்டலேறு அணையில் தற்போது நீர் மட்டம் குறைந்து காணப்படுவதால் நீர் மட்டம் உயர்ந்த பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என்று ஜெகன்மோகன்ரெட்டி உறுதி அளித்தார். அதன்படி 10-ந் தேதி மாலை சோமசீலா நீர் தேக்கத்திருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டிஎம்சி. தற்போது 12 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 25-ந் தேதி கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர்.

முதலில் 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தற்போது 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற் பொறியாளர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் பிரதீஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

இந்த தண்ணீர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு அல்லது நாளை காலை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் சப்ளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News