செய்திகள்
மின் மீட்டர்

புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2019-09-26 03:45 GMT   |   Update On 2019-09-26 03:45 GMT
சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மின்வாரிய நஷ்டத்தை மக்கள் மீது திணிக்கலாமா?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
சென்னை:

புதிய மின் இணைப்பு பெறுகையில் பல்வகை கட்டணம் என்ற பெயரில், நுகர்வோரிடம் இருந்து மின்சார வாரியத்தால் ‘டெபாசிட்’ தொகை வசூலிக்கிறது. பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இந்த கட்டணம் ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின் பயன்பாட்டுக்கு ஏற்ப 2 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நடைமுறையில் உள்ள இந்த கட்டணம் கடந்த 2004-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது ஆகும். இந்த கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார வாரியம் சார்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2012-ம் ஆண்டு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் புதிய மின் இணைப்பு கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆணையத்தின் தலைவர் மு.சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் த.பிரபாகரராவ், கி.வெங்கடசாமி, செயலாளர் சு.சின்னராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், விவசாயசங்க பிரதிநிதிகள், சர்க்கரை ஆலைகள், ஸ்பின்னிங் மில் அதிபர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

கூட்டத்தில், புதிய மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த வாதங்களின் விவரங்கள் வருமாறு:-

* புதிய மின் இணைப்பு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதை ஏற்க முடியாது. உதாரணத்துக்கு வீடுகளுக்கு ஒரு முனை இணைப்புக்கான பல்வகை கட்டணம் ரூ.1,600-ல் இருந்து, ரூ.4,600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.200 ஆக இருந்த மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம் ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.

* மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பொதுமக்களிடம் திணிக்கலாமா?

* மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்கினாலே, அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கவேண்டிய நிலை இருக்காது. அதேவேளை இயற்கை பேரிடர்களை மின்சார வாரியம் காரணம் கூறுவதை ஏற்க முடியாது.

* மின் கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும் என்றால் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம். அதற்காக இப்படி பன்மடங்கு ஏற்றுவதை எளிய மக்கள் எப்படி தாங்குவார்கள்?.

* மின் திருட்டில் ஈடுபடுவோருடன் சமரசம் செய்து அதிக அபராதம் வசூலிப்பதை விடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் திருட்டு ஒழிக்கப்பட்டாலே மின்சார வாரிய நஷ்டம் வெகுவாக குறையும்.

* நகரில் உள்ள பெரும்பாலான டிரான்ஸ்பார்மர்கள் முறையாக பராமரிக்கப்படுவதே இல்லை. எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறாதபோது, நுகர்வோரை ஏன் துன்புறுத்த வேண்டும்?

* இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டணத்தை நுகர்வோர் மனமுவந்து ஏற்றுக்கொள்வதின் மூலம் மின்சார வாரியத்தின் நஷ்டம் தீர்க்கப்படுமா?, தீர்க்கப்படும் என்றால் முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறோம்.

இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் இருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் தரமான மின் மீட்டர்கள் தர வேண்டும், மின் மீட்டர் எரிந்து விபத்து ஏற்பட்டால் அதற்கான தொகையை நுகர்வோரிடம் வசூலிக்கக்கூடாது, உத்தேச கட்டணம் நிர்ணயிப்பதை கைவிட்டு ஊழியர்கள் வீடு தோறும் வந்து மின் அளவீட்டை கணக்கிட்டு செல்ல வேண்டும், மின் இணைப்பை துண்டித்து விடுவேன் என்று அடிக்கடி மின் ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக மின்சார வாரிய பொறியாளர் பிரிவு அதிகாரி டி.ஜெயந்தி மின்கட்டண உயர்வு ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. 
Tags:    

Similar News