செய்திகள்
குடிமராமத்து பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

முதுகுளத்தூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ஆய்வு

Published On 2019-09-25 18:12 GMT   |   Update On 2019-09-25 18:12 GMT
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கண்மாய், ஊருணிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் சாம்பக்குளம் கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டிலும், புழுதிக்குளம் கண்மாயில் ரூ.34½ லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திடும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37½ கோடி மதிப்பீட்டில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்க நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள 69 கண்மாய்களில் கரைகள் பலப்படுத்துதல், வரத்துக்கால்வாய் புனரமைத்தல், உபரிநீர் வடிகால் புனரமைத்தல், மடைகள் மராமத்து செய்தல் மற்றும் மீளக்கட்டுதல், கலுங்குகள் மராமத்து செய்தல் மற்றும் மீளக்கட்டுதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாயை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளின் நிலை குறித்து கள ஆய்வு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் முதல் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் மற்றும் 3-ம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி பொறியாளர் சுரேஷ், முதுகுளத்தூர் தாசில்தார் கல்யாணகுமார், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாவித்திரி, பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News