செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2019-09-25 05:02 GMT   |   Update On 2019-09-25 05:02 GMT
ஒகேனக்கல்லில் இன்று காலை நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டாலும் காவிரி ஆறு வரும் பாதைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை 10 மணிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 8 மணிக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லில் இன்று 20-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று 49-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.

கடந்த வாரம் தண்ணீர் அதிகமாக வந்தபோது தடையை மீறி பரிசல் ஓட்டி ஒருவர் பரிசல் இயக்கியதால் புதுச்சேரியை சேர்ந்த பெண் பரிசல் கவிழ்ந்து பலியானார்.

அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பரிசல் ஓட்டிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களிடம் போலீசாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் பரிசல் இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோரத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.

மேலும் கார், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகிறார்கள்.

ஒகேனக்கல்லில் நீச்சல் வீரர்களுடன் கூடிய நடமாடும் உதவிக்குழுக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News