செய்திகள்
எம்ஆர் விஜயபாஸ்கர்

கரூரில் புதிதாக 4 கதவணைகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

Published On 2019-09-24 10:22 GMT   |   Update On 2019-09-24 10:22 GMT
கரூர் மாவட்டத்தில் கூடுதலாக 4 கதவணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் புதிய கதவணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் கட்டலாம் என நெரூர், கிழக்குத்தவிட்டுப்பாளையம், புகளூர், கொம்புப்பாளையம் நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுப் பணித்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் கதவணை அமைப்பதற்கு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றார். இதில் புஞ்சை புகளூர் பகுதியில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கதவணை கட்டப்படவுள்ளது. குளித்தலை மற்றும் நெரூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு முதற்கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட காவிரி ஆற்றில் எந்த இடத்தில் இன்னொரு புதிய கதவணை அமைக்கலாம் என்பது குறித்து பொதுப் பணித்துறையினருடன் இணைந்து ஆய்வு செய்யப்படுகின்றது. மிக விரைவில் கரூர் மாவட்டத்தில் கூடுதலாக 4 கதவணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே மாயனூரில் ஒரு கதவணை உள்ளது. இந்த கதவணையில் சுமார் 1.15 டி.எம்.சி நீரை தேக்கிவைக்கலாம். புஞ்சை புகளூரிலும் அதே போல கதவணை அமைக்கப்படவுள்ளது. மேலும் இந்த புதிய கதவணையில் தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான கட்டமைப்புகளும் இந்தக் கதவணை அமைக்கப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இந்த புதிய கதவணைகள் கட்டப்படும் பட்சத்தில், குடிநீர் பஞ்சமே இருக்காது. அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெற்ற மாவட்டமாக உருவாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நெரூர் மணிவண்ணன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், டி.என்.பி.எல். சரவணன், சதாசிவம், பொதுப்பணித்துறையின் திருச்சி கோட்டத்தின் திட்டம் மற்றும் வடிவமைப்பு செயற்பொறியாளர் மூர்த்திராஜன், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் ஸ்ரீதர், பசுபதி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News