செய்திகள்
வைகை அணை

வைகை அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-09-24 10:20 GMT   |   Update On 2019-09-24 10:20 GMT
மூல வைகையில் நீர் பெருக்கு வைகை அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிப்பட்டி:

வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூலவைகையில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கன மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதுடன் வைகை அணைக்கும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. சில நாட்கள் மழை நின்றபிறகு மீண்டும் தற்போது கன மழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டம் மட்டுமின்றி வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, மூலவைகை, வெள்ளி மலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்து வருகிறது.

இதனால் வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, வண்டியூர், சீலமுத்தையா புரம், தண்டியகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழையினால் சுருளி மற்றும் சின்னசுருளி அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றங்கரை ஓரமாக உள்ள விவசாயிகள் தென்னை, வாழை, தக்காளி, பீன்ஸ், அவரை, எலுமிச்சை போன்ற பயிர்களை நடவு செய்து வருகின்றனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.15 அடியாக உள்ளது. வரத்து 1131 கன அடியாகவும், திறப்பு 1420 கன அடியாகவும் உள்ளது. இருப்பு 3876 மி.கன அடி.

வைகை அணையின் நீர்மட்டம் 56.63 அடி. வரத்து 1432 கன அடி. திறப்பு 960 கன அடி. இருப்பு 2989 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36 அடி. வரத்து 65 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89 அடி. வரத்து 39 கன அடி. திறப்பு 3 கன அடி.

பெரியாறு 14.8, தேக்கடி 11.8, கூடலூர் 44, சண்முகாநதி அணை 41, உத்தமபாளையம் 45.2, சோத்துப்பாறை 28, வீரபாண்டி 3, வைகை அணை 11.4, மஞ்சளாறு 14, மருதாநதி 8, கொடைக்கானல் 9.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News