செய்திகள்
சஸ்பெண்டு

உண்டியல் முறைகேடு - காரமடை அரங்கநாதர் கோவில் ஊழியர் சஸ்பெண்டு

Published On 2019-09-24 10:01 GMT   |   Update On 2019-09-24 10:01 GMT
உண்டியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததால் காரமடை அரங்கநாதர் கோவில் கணக்கர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

காரமடை:

கோவை காரமடையில் உள்ளது அரங்கநாதர் கோவில். இங்கு கணக்கராக வேலை பார்த்து வந்தவர் மகேந்திரன் (வயது 50). இந்நிலையில் அரங்கநாத சுவாமி கோவிலின் உபகோவிலான பெட்டதம்மன் மலைக்கோவிலில் அமாவாசை நாளில் உண்டியலில் சேகரமாகும் தொகை அதிகாரிகள் முன்னிலையில், அந்த கோவில் வளாகத்திலேயே எண்ணப்படுவது வழக்கம்.

கடந்த அமாவாசை நாளுக்கு பின் பெட்டதம்மன் மலையிலிருந்து அரங்கநாதர் கோவிலுக்கு உண்டியல் எடுத்து வரப்பட்டது. அதில், ‘சீல்’ உடைக்கப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கணக்கர் மகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதில் மகேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை, இணை கமி‌ஷனர், முறைகேட்டில் ஈடுபட்ட மகேந்திரனை, ‘சஸ்பெண்ட்’ செய்தார். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியனிடம் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

கோவில் கணக்கர் மகேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்று கோவை மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் மாணிக்கம் கூறினார்.

Tags:    

Similar News