செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி கிடைத்து விட்டதா?- ஐகோர்ட்டு கேள்வி

Published On 2019-09-24 09:56 GMT   |   Update On 2019-09-24 09:56 GMT
மெரினா கடலில் மூழ்கியவர்களை காப்பாற்ற படகுகள் உள்ளிட்டவைகளை வாங்க மத்திய அரசு நிதி கிடைத்து விட்டதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சந்தோஷ்(வயது 14) என்ற சிறுவன் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதமும், ஆகாஷ் என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவன், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் மூழ்கி பலியாகினர்.

இதுகுறித்து அவர்களது பெற்றோர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மெரினா கடற்கரையில் அடிக்கடி பலர் மூழ்கி பலியாகின்றனர். இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி பெயரில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மெரினா கடலில் குளித்தால் பாதுகாப்பு இல்லை. உயிர் பலி ஏற்படும் என்று கடந்த ஜூலை 24-ந்தேதி மாநில கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதை போலீஸ் துணை கமி‌ஷனர் நடத்தினார். மெரினா கடற்கரையில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரையில் அபாயகரமான பகுதி குறித்து 88 அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடலில் யாராவது மூழ்கினால், அது குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண் 1093 அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் பல வாங்கப்பட்டுள்ளது.

‘சுவதேஷ் தர்சன்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 4 மீட்பு படகுகள், கடல் மண்ணில் வேகமாக செல்லக்கூடிய 5 ‘பீச் பக்கீஸ்’ வாகனங்கள், நீரிலும், நிலத்திலும் ஓடக்கூடிய ஒரு வாகனம், 236 கண்காணிப்பு கேமராக்கள், 11 கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவைகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோக தமிழக சுற்றுலாத்துறையும், படகுகள், கடற்கரை மணலில் வேகமாக செல்லக்கூடிய வாகனங்கள், பாதுகாப்பு கவசங்கள் வாங்கப்பட்டு, அவை கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் பயிற்சியை சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அவர்கள் புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் மேற்கொண்டுள்ளனர். இதுபோல தமிழக அரசு 2019-20-ம்ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியை கொண்டு 200 மீனவர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர், இவர்கள் கடலில் மூழ்கும் நபர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர், ‘படகுகள் உள்ளிட்டவைகளை வாங்க மத்திய அரசின் ‘சுவதேஷ் தர்சன்’ திட்டத்தின் கீழ் நிதி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு விட்டதா? இல்லையா? மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியும் உள்துறைக்கு வழங்கப்பட்டு விட்டதா?’ என்பது குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூடுதல் குற்றவியல் வக்கீலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News