செய்திகள்
கோப்பு படம்

குமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை - புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது

Published On 2019-09-23 12:30 GMT   |   Update On 2019-09-23 12:30 GMT
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 21 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையம் மற்றும் ஆஸ்பத்திரிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் போலீசார் மேற் கொண்ட சோதனையில் அந்த பகுதியில் புகையிலை விற்பனை செய்ததாக கனக ஜெலின்(வயது46) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதே போல் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கண்ணன் நாகம் பகுதியில் ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் புகையிலை விற்பனை செய்ததாக பால கிருஷ்ணன்(60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் தலகுளம், பன்னிக்கோடு பகுதிகளிலும் நடத்திய சோதனையில் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக நாகராஜன்(51), சண்முகவடிவு(62) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 37 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதே போல் தக்கலை, வடசேரி மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் நடத்திய சோதனையில் 21 பேர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 350 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று மேற்கொண்ட சோதனையில் மாவட்டம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது அடி, தடி வழக்கு, கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது.

போலீசார் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News