செய்திகள்
விபத்து

தாராபுரத்தில் இன்று காலை விபத்து - கல்லூரி மாணவிகள் 24 பேர் காயம்

Published On 2019-09-23 10:38 GMT   |   Update On 2019-09-23 10:38 GMT
மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கல்லூரி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சில் இருந்த மாணவிகள் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாராபுரம்:

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பஸ்கள் மூலம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தினமும் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்.

இன்று காலை தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 40 மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு பஸ் புறப்பட்டது. பஸ் தாராபுரம் இடையன் கிணறு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கல்லூரி பஸ் மீது மோதி விபத்தானது. இதில் கல்லூரி பஸ்சில் இருந்த மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

மாணவிகளின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம்அடைந்த மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 24 மாணவிகளை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் தாராபுரத்தை சேர்ந்த மாணவி கீர்த்திகா (வயது 18), சூர்யாபிரியா (18), கலையரசி (18) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கீர்த்திகா, சூர்யபிரியா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், கலையரசி தாராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 21 மாணவிகளுக்கு தாராபுரம் ஆரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்த பகுதியில் தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பஸ் மோதி காரில் வந்த 3 மின் ஊழியர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பகுதியில் விபத்தை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News