செய்திகள்
சாலை மறியல்

தஞ்சை அருகே குடிநீர் விநியோகத்தை சீரமைக்கக்கோரி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2019-09-23 10:34 GMT   |   Update On 2019-09-23 10:34 GMT
தஞ்சை அருகே குடிநீர் விநியோகத்தை சீரமைக்கக்கோரி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 வாரமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. 

இதனால் அருகே உள்ள விவசாய கிணற்றிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்தனர். குடிநீர் வினியோகம் செய்யக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் பிள்ளையார்பட்டி பஜாரில் திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி மற்றும் தமிழ்ப் பல்கலைகழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News